திருவெள்ளக்குளம்
- மூலவர் : ஸ்ரீநிவாஸன்,
கண்ணன், நாராயணன், அண்ணன் பெருமாள் (திருப்பதி பெருமாளுக்கு அண்ணன்), நின்ற திருக்கோலம்,
கிழக்கே திருமுக மண்டலம்.
- தாயார் : அலர்மேல்மங்கை. உத்ஸவர்: பத்மாவதி,
பூவார் திருமகள்.
- தீர்த்தம் : திருவெள்ளக்குளம், ஸ்வேத புஷ்கரிணி
- விமானம் : தத்வத்யோக விமானம்.
- ப்ரத்யக்ஷம் : ருத்ரர், ச்வேதராஜன்.
குறிப்பு : திருவெள்ளக்குளம் ,அண்ணன் கோயில், திருநாங்கூர் சீர்காழியிலிருந்து சுமார்
8 கி.மீட்டர் தொலைவில் உள்ளது.
மூலவர் ஸ்ரீநிவாசன், கண்ணன், நாராயணன், அண்ணன் பெருமாள் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார்.
தாயார் அலர்மேல்மங்கை. உற்சவர் ஸ்ரீனிவாசப் பெருமாள். தாயார் பத்மாவதி, பூவார் திருமகள்.
இந்தபதியை தென் திருப்பதி என்றும் அழைப்பர். இங்கே திருப்பதிபோல் தலைமுடி காணிக்கை
செலுத்தி வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர். இக்கோயிலில் கல்யாணமும் நடத்திக் கொள்கின்றனர்.
ஒரு சமயம் சூர்ய வம்சத்தில் துந்துமாரன் என்ற மன்னனுக்குச் சுவேதன் என்றொரு புத்திரன்
இருந்தான். அவனுக்கு ஒன்பதாவது வயதில் மரணகண்டம் என்று சாஸ்திர வாதிகளால் அறிந்ததும்
அதற்கு பிரயசித்தம் காண தன்குல குருவான வசிட்டரை அணுக, அவரோ இவ்விடத்திற்குச் சென்று
தவம் செய்ய கூறினார்.
எனவே இவ்விடம் வந்த சுவேதன், மருத்த முனிவர் ஆசிரமம் சென்று ஆயுள்
விருத்தி மந்திரத்தை பயிற்சி பெற்று,இங்குக் கடுந்தவம் இயற்றினான். இதைக் கண்ட மகாவிஷ்ணு
அவனுக்குக் காட்சி கொடுத்து மரண கண்டத்தை இல்லாததாக்கி மார்க்கண்டேயனைப் போல் நீண்ட
ஆயுளை நல்கினார். ஆதலால் இத்தலத்தின் எதிர்புறம் அமைந்துள்ள சுவேத புஷ்கரிணி திருவெள்ளக்குளம்
என்ற பெயர் பெற்றது.
இந்த சுவேத புஷ்கரிணியில் உள்ள குமுத மலர்களைக் கொய்து செல்லத் தேவகுலப் பெண்கள் வருவது
வழக்கமாக இருந்தது. அவ்வாறு ஒரு சமயம் வந்த தேவகுல பெண்களில் மானிடப் பார்வைக்கு இலக்காகி
இங்கேயே நின்று விட்ட குமுதவல்லியைத்தான் திருமங்கையாழ்வாருக்குக் கன்னிகாதானம் செய்து
கொடுக்கப்பட்டது.
இங்கு குமுதவல்லிக்கு ஒரு தனிச் சந்நிதி உள்ளது. திருமங்கையாழ்வார் வேங்கடவனையே இத்தலத்தில்
காண்கிறார்.
வேங்கடவனே இத்தலத்தில் எழுந்தருளியிருப்பதாகவும், திருப்பதி ஸ்ரீனிவாசனுக்கு இவர் அண்ணன்
எணவும் ஆதலால் இத்தலம் அணணன் கோயில் எனப் பெயர் பெற்றது என்கிறார். திருமலையில் பெருமாளுக்குரிய
திருநாமமான ஸ்ரீநிவாசன் என்பதும் தாயாருக்கு அலர்மேல்மங்கை என்பதும், 108 திவ்ய தேசங்களிலேயே
இத்தலத்தில் உள்ள பெருமாள் மற்றும் தாயாருக்கு மட்டுந்தான் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பதிக்கு வேண்டிக் கொண்ட வேண்டுதலை இங்கே செலுத்துவது ஒரு மரபாகும். திருநாங்கூரில்
நடைபெறும் தை அமாவாசை மறுநாள் கருடசேவைக்கு இப்பெருமானும்எழுந்தருளுவார்.
திருமங்கை ஆழ்வார் திருவேங்கடத்துப் பெருமானிடம் உன் புகழைப்பாடிவரும் என் வினைகளை;ப
போக்கிவிடு என்று இப்பாசுரத்தில் பாடியுள்ளார்.
"வேடுஆர் திருவேங்கடம் மேய விளக்கே நாடு ஆர் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர்ச் சேடு
ஆர் பொழில் சூழ் திருவெள்ளக் குளத்தாய் பாடா வருவேன் வினை ஆயின பாற்றே"
- மங்களாசாஸனம் :
- திருமங்கையாழ்வார்: 1308 - 1317 -
- 10 பாசுரங்கள்.
வீடியோ காட்சி பிறகு சேர்க்கப்படும்.