திருபார்த்தன்பள்ளி
- மூலவர் : தாமரையாள்
கேள்வன், நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலம்.
- உத்ஸவர் :பார்த்தஸாரதி
- தாயார்
: தாமரை நாயகி.
- தீர்த்தம் : சங்க ஸரஸ் (கங்கா தீர்த்தம்).
- விமானம் : நாராயண விமானம்..
- ப்ரத்யக்ஷம் : பார்த்தன், வருணன், ஏகாதசருத்ரர்கள்.
குறிப்பு : திருப்பார்த்தன் பள்ளி, சீர்காழியிலிருந்து தென்கிழக்கே 11 கி.மீட்டர் தொலைவில்
இத்தலம் அமைந்துள்ளது. திருவெண்காட்டிலிருந்து 3 கி.மீட்டர் தொலைவில் உள்ளது.
மூலவர் தாமரையாள் கேள்வன் நின்ற கோலத்தில் மேற்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார்.
தாயார் தாமரை நாயகி.
உற்சவர் பார்த்தசாரதிப் பெருமாள்.
மற்றொரு உற்சவர் கோலவல்லி ராமன் சங்கு, சக்ரம், கதை, வில்லு, அம்பு ஏந்திய வண்ணம் அழகாய்
மிளிருகிறார்.
அர்ச்சுனன் இவ்விடத்திற்கு வந்தபோது அதிகமான தாக வேட்கை ஏற்பட்டு, இங்கே தவம் செய்து
கொண்டிருந்த அகத்தியரிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்க, அகத்தியர் கமண்டலத்தை நோக்க,
அதில் இருந்த நீரும் வற்றிப்போனது.
இது கண்ணனின் வேலையென்று தெரிந்து கொண்டு, அர்ச்சுனனை நோக்கி அர்ச்சுனா நீ எப்போதும்,
எந்த உதவி வேண்டுமானாலும் உன் ஆபத்பாந்தவனான கண்ணனையல்லவா அழைக்க வேண்டும் என்று கூற,
உடனே அர்ச்சுனனும் கண்ணனi நினைக்க, கண்ணன் அங்கு வந்து கத்தி ஒன்றை அர்ச்சுனனிடம் கொடுத்தான்.
அக்கத்தியால் பூமியைப் பிளக்க உடனே கங்கை நீர் பெருகியது. தாகந்தீர்ந்த அர்ச்சுனன்
கண்ணனால் இவ்விடம் சிறிது ஞானோபதேசமும் பெற்றான்.
பார்த்தனுக்காக அருளிச் செய்த தலமாதலால் பார்த்தன் பள்ளி ஆயிற்று. இங்கே பார்த்தனுக்கு
(அர்ச்சுனன்) தனிச் சந்நிதி உள்ளது. வருணன் இவ்விடத்துத் திருமாலைக்குறித்துக் கடுந்தவமியற்றித்
தனக்குப் பார்த்தசாரதியாக காட்சியளிக்குமாறு வேண்ட, அவ்விதமே பார்த்தசாரதி பள்ளியென
வழங்கிப் பிறகு பார்த்தன் பள்ளியாயிற்று என்பர்.
பார்த்தசாரதி என்ற பெயரில் திருவல்லிக்கேணியில் எழுந்தருளியுள்ள பெருமாள் இரண்டு கைகளுடன்
வீரம் ததும்பும் முகத்துடன் உள்ளார். இங்குச் சங்கு சக்கரங்களுடன் நான்கு புஜங்களுடன்
சாந்தம் தவழும் திருமுக்ததுடன் காட்சியளிக்கிறார்.
பதினொரு பெருமாள்களில் ஒருவராக இங்கு எழுந்தருளிய இப்பெருமாள் குருக்ஷேத்திரத்திலிருந்து
வந்தவரென்றும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதியே இங்கு வந்தாரென்றும் சொல்வர்.
திருநாங்கூர் 11 திவ்ய தேசங்களில் ஒன்றான இத்தலம் பலாசவனச் க்ஷேத்திரம், புரங்காடு
என்று அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ளது. பலாசவனம் என்பது இத்தலம் உள்ள பகுதியோடு
முடிவடைகிறது.
திருநாங்கூரிலும் நடைபெறும் தை அமாவாசை மறுநாள் கருடசேவைக்கு இப்பெருமாளும் எழுந்தருளுவார். திருமங்கை ஆழ்வார் இந்தப் பார்த்தன் பள்ளியைப் பாடிய பாசுரம்:
"கவள யானைக் கொம்பு ஒசித்த கண்ணன் என்றும், காமரு சீர் குவளை, மேகம் அன்ன மேனி கொண்ட
கோன், என் ஆனை என்றும், தவள மாடம் நீடு நாங்கைத் தாமரையாள் கேள்வன் என்றும், பவளவாயாள்
என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே"
- மங்களாசாஸனம் :
- திருமங்கையாழ்வார்: 1318 - 1327 -
- 10 பாசுரங்கள்.
வீடியோ காட்சி பிறகு சேர்க்கப்படும்.