|
திருக்கோஷ்டியூர்
- மூலவர் : உரகமெல்லணையான்,
புஜங்கசயனம், கிழக்கே திருமுக மண்டலம்.
- உத்ஸவர் :ஸெளம்ய
நாராயணன், நின்ற திருக்கோலம்.
- தாயார்
: திருமாமகள் நாச்சியார் (தனிக்கோயில் உண்டு).
- தீர்த்தம் : தேவ புஷ்கரிணி (திருப்பாற்கடல்).
- விமானம் : அஷ்டாங்க விமானம் .
- ப்ரத்யக்ஷம் : இந்த்ரன், கதம்பமுனி.
குறிப்பு: திருக்கோஷ்டியூர், திருபத்தூரிலிருந்து 10 கி. மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
மும்மூர்த்திகளுடன், தேவர்களும் சப்தரிஷிகளும் கோஷ்டியாக இத்தலத்துக்கு வந்ததால்
இது திருகோஷ்டியூர் எனப் பெயர் பெற்றது.
முதல் மாடியில் மூலவர் உரகமெல்லணையான் புஜங்க சயனத்தில், வலது கையால் ஆதிசேஷனுக்கு
அபயமளித்து, கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார்.
மேலும் நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும், கூத்தாடிய கோலங்களில் முதல் மாடியிலேயே
எழுந்தருளியுள்ளார். இரண்டாவது மூன்றாவது மாடிகளில் பெருமாள் நின்றும், இருந்தும் எழுந்தருளியுள்ளார்.
தாயார் திருமாமகள் நாச்சியார். உற்சவர் சௌம்ய நாராயணன் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.
பிரம்மனால் சாகா வரம்பெற்ற இரண்யன், தேவர்களை துன்புறுத்தி, உலகெங்கும் தன் நாமத்தை
சொல்ல வேண்டும் என்று கூற, தேவர்கள் துன்பப் பட்டனர். தேவர்கள் திருமாலிடம் முறையிட,
திருமால் சங்கு கர்ணனைப் பார்த்து, நீ சென்று இரண்யன் மனைவியின் வயிற்றில் பிரகலாதனாகப்
பிறக்க வேண்டும் எனக் கூறினார். அவ்விதமே பிரகாலாதன் பிறந்து நாராயண மந்திரத்தைச் சொல்ல,
உன் நாராயணன் எங்கே என்று இரண்யன் கேட்க, அவன் தூணிலிருப்பான், துரும்பிலிருப்பான்
எனக் கூறினான். இத்தூணில் உள்ளானோ என்று கேட்க, பெருமாள் அத்தூணில் இருந்து நரசிம்மவதாரமாகத்
தோன்றி இரண்யனைக் கொன்றார்.
பிரம்மன் தேவ சிற்பியான விசுவகர்மாவை அழைத்து தேவலோகத்தில் உள்ளது போன்ற விமானத்தை
இவ்விடத்தில் எழுப்புமாறு கூறினார். இங்கு மூன்று தலங்களுடன் அஷ்டாங்க விமானம் அமைக்கப்பட்டது.
இரண்யவதம் முடியும் வரை இங்கு தங்கியிருந்த தேவேந்திரன் இந்திர லோகத்தில் தன்னால் பூஜிக்கப்பட்ட
பேரழகு வாய்ந்த ஸ்ரீபூமி நீளா தேவிகளுடன் கூடின ஸ்ரீசௌமிய நாராயணனை, கதம்ப மகரிஷிக்கு
தந்தார். அனைவரும் அதன் பின்னரே விண்ணுலகம் அடைந்தனர்.
ஸ்ரீரங்கத்திலிருந்து 17 முறை திருக்கோட்டியூர் வந்த ஸ்ரீஇராமானுஜருக்கு 18 வது முறை
திருக்கோட்டியூர் நம்பிகளிடமிருந்து திருமந்திர ஞானம் கிடைத்தது. ஸ்ரீஇராமானுஜருக்கு
"எம்பெருமானார்" என்ற சிறப்புப் பெயரும் இத்தலத்திலேயே கிடைத்தது. நரகம் சென்றாலும்
பரவாயில்லை பலரும் பெருமாள் திருவடி அடைய வேண்டும் எனக் கருதிய இராமானுஜர் இங்குள்ள
அஷ்டாங்க விமானத்திலிருந்தே பாமர மக்களை அழைத்து திருமந்திர ரகசியத்தை வெளியிட்டார்.
இங்கு அவர் உபதேசித்த இடத்தில் இராமானுஜரின் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
திருக்கோட்டியூர் நம்பியின் அவதாரத்தலமே இதுவாகும். இங்கு அவருக்கென தனிச் சந்நிதி உள்ளது. அங்கு அவர் வழிபட்ட ஸ்ரீராமன், சீதை, இலட்சுமணன், விக்ரகங்கள் உள்ளன. மற்றும்
லக்ஷ்மி நரசிம்மர் சந்நிதி உள்ளது.
பெரியாழ்வார் பெருமாளை வணங்காதவர் மீது கோபங் கொண்டு பாசுரத்தில் பாடுகிறார்.
"குற்றம் இன்றிக் குணம் பெருக்கிக்
குருக்களுக்கு அனுகூலராய்ச்
செற்றம் ஒன்றும் இலாத வண்கையினார்கள்
வாழ் திருக்கோட்டியூர்த்
துற்றி ஏழ் உலகு உண்ட தூமணி வண்ணன்
தன்னைத் தொழதவர்
பெற்ற தாயர் வயிற்றினைப்
பெரு நோய் செய்வான்
பிறந்தார்களே"
- மங்களாசாஸனம் :
- பெரியாழ்வார் : 13 - 22, 173, 360 - 370 .
- திருமங்கையாழ்வார் : 1550 , 1838 - 1847 , 1856 , 2674 (125).
- பூதத்தாழ்வார் : 2227 , 2268 .
- பேயாழ்வார் : 2343 .
- திருமழிசையாழ்வார் : 2415 .
- மொத்தம் 39 பாசுரங்கள் .
வரைபடத்தை நகர்த்தி மேலும் தொடர்ந்து பார்க்கலாம்
ப்ளே பட்டன் க்ளிக் செய்து சில நொடிகள் காத்திருக்கவும்
|
Donate Us
|
Copyright (c) 2011 www.ahobilam.com
Web site does
not belong to any Mutt or Ashram!
Privacy Policy | Disclaimer
|
தங்கள்
வருகைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருக!! நல் ஆலோசனைகள் தருக!!!
|
|