அந்தந்த நக்ஷத்திரத்திற்குரிய சந்திராஷ்டம நக்ஷத்திரங்கள் எதிரெதிரே தரப்பட்டுள்ளன. சந்திராஷ்டம நக்ஷத்திரம் உள்ள நாட்களில் சங்கடங்கள் நேரலாம் கவனமாக இருக்கவும். புது முயற்சி, சுப காரியங்களை தவிர்க்கவும்.
பஞ்சகம் மிக முக்கியம்:-
நம் பஞ்சாங்கத்தில் 21ம் பக்கம் பஞ்சகம் என்ற தலைப்பின் கீழ் இந்த விபரம் தரப்பட்டுள்ளது. சுப கார்யம் செய்யத் தேர்ந்தெடுத்த நாளின் திதி, வாரம் (கிழமை), நக்ஷத்திரம், தேர்ந்தெடுத்த லக்கினம் இவற்றைக் கூட்டி ஒன்பதால் வகுத்து வரும் மீதி 0, 3, 5, 7, 9 ஆகில் உத்தம பஞ்சகம். ப்ரதமை -1, த்விதியை - 2 என்று கணக்கிடவேண்டும். அதுபோல் அஸ்விநி -1, பரணி - 2 என வரிசை எண்ணையே அந்த நக்ஷத்திரத்தின் எண்ணாகக் கொள்ளவேண்டும். அதுபோல் ஞாயிறு -1, திங்கள்-2, செவ்-3 என்று கிழமைக்கும், மேஷம் -1, ரிஷபம்-2 ... மீனம் -12 என லக்னங்களுக்கும் எண் தெரிந்துகொள்ளவேண்டும். இது தவிர லக்ன துருவ எண் (4 லக்னங்களுக்கு மட்டும்) மேஷம் - 5, ரிஷபம் - 7, மகரம் -2, கும்பம் - 4, மீனம் -6 இவற்றையும் கூட்டி பின் 9 ஆல் வகுக்கு வேண்டும். 0,3,5,7,9 ஆகியவை நிஷ் பஞ்சகம் உத்தமம் என்றும் மற்ற 1, 2, 4, 6, 8 ஆகிய பஞ்சகங்களுக்கும் முறையே ரத்னம், சந்தனம், எலுமிச்சை, தீபம், தானியம் இவற்றை தானமாக அளித்து பரிகாரம் செய்து கொண்டு சுபங்கள் செய்யலாம் என்று பல பஞ்சாங்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராகு காலம் எம கண்டத்தில் கவனம் வேண்டும் :-
எல்லாவற்றையும் நன்றாகக் கணித்துவிட்டு கடைசியில் ராகு, காலம் எம கண்டத்தை மறந்துபோய்விடுகிறவர்கள் உண்டு. எனவே நாம் தேர்ந்தெடுத்த லக்னத்தில் ராகு, அல்லது எமகண்டம் வந்தால், ராகு - எமகண்ட காலம் முடிந்த பிறகு லக்னத்தில் பாக்கி உள்ள நேரத்தைக் கொண்டு முஹூர்த்தம் நிர்ணயிக்கவேண்டும்.
சந்த்ராஷ்டம தினங்களில் சுப காரியங்களில் ஈடுபடக்கூடாது:-
நம் பஞ்சாங்கத்தில் 2ம் பக்கம் முதல் தலைப்பு "சந்த்ராஷ்டமம் அறிதல்" - அதன் கீழ் ஒவ்வொரு நக்ஷத்திரத்திற்கும் சந்திராஷ்டம நக்ஷத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. முஹூர்த்தம் யாருக்காககப் பார்க்கிறோமோ அவருக்கு சந்திராஷ்டம நக்ஷத்திரம் உள்ள நாளில் வரும் முஹூர்த்தங்களை விலக்கிவிட்டு மற்ற நாட்களைப் பார்த்துத் தேர்ந்தெடுக்கவேண்டும்.
முஹூர்த்த நிர்ணய க்ரமம் (வரிசை):-
டக் டக்கென்று சுலபமாக முஹூர்த்தம் நிர்ணயம் செய்ய வழி முறைகள்:-
1. எந்தத் தமிழ் மாதத்தில் முஹூர்த்தம் பார்க்கவேண்டுமோ அந்த மாதத்தில் மரணயோகம், செவ்வாய், சனி ஆகியவை உள்ள நாட்களை விடுத்து மற்ற நாட்களை எடுத்து எழுதிக் கொள்க.
2. நம் பஞ்சாங்கத்தில் 23ம் பக்கப்படி தினப்பொருத்தம் உள்ள நக்ஷத்திரங்களில் ஆகாத நக்ஷத்திரங்கள் போக பாக்கி நக்ஷத்திரங்கள் உள்ள தினங்கள், ஆகாத திதிகள் உள்ள தினங்கள், மற்றும் சந்திராஷ்டம நக்ஷத்திரங்கள் உள்ள தினங்களை நீக்கிவிடுக. 50 சதவீதம் முடிந்தது.
3. பாக்கித் தேறிய தினங்களில் வளர் பிறையில் உள்ள தினமாகவும், இரு கண்ணுள்ள (புதன், வியாழன், வெள்ளி) நாளாகவும் உள்ள ஒரு நாளை எடுத்துக்கொண்டு, அந் நாளை தமிழ், ஆங்கில தேதிகளுடன் ஒரு பேப்பரில் எழுதிக்கொள்க.
அன்றைய தினத்திற்கு 23ம் பக்கப்படி சூர்ய உதயம் பார்த்து வலது கடைசியில் மணி - நிமிடம் என்ற தலைப்பின் கீழ் எழுதிக் கொள்ளக.
அன்றைய தினத்திற்கு பஞ்சாங்கத்தில் "ராசி இரு" என்பதற்குக் கீழ் உள்ள மணி - நிமிடத்தை எடுத்து பேப்பரில் அந்த மாதத்தின் பெயருடன் இருப்பு என (மேஷ இருப்பு -- ரிஷப இருப்பு என்பதுபோல) சேர்த்து எழுதி முன் சூரிய உதய மணி நிமிடங்களுக்கு கீழ் கூட்ட வசதியாக எழுதிக் கொள்ளவும். தற்போது இவை இரண்டையும் கூட்டி 60க்கு மேல் வரும் நிமிடங்களை ஒன்று என்று மணியுடன் ஒன்றைக் கூட்டி 60க்குக் குறைவான நிமிடங்களை நிமிடங்களின் கீழ் எழுதி, மணியைக் கூட்டி மணியின் கீழ் எழுத, ஆரம்ப லக்னம் எத்தனை மணி வரை இருக்கிறது என்ற நேரம் கிடைக்கும். இந்த ஆரம்ப லக்னத்திற்கு ஸ்தான சுத்தம் இருந்து, பஞ்சகம் இருந்து, ராகு, எமகண்டம் நீக்கி போதுமானதாக இருந்தால் இதையே லக்னமாக வைத்துக்கொள்ளலாம். தேவைப்பட்டால் 21ம் பக்கம் உள்ள ராசிகளுக்கான கால அட்டவணையில் இருந்து அடுத்த லக்னத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ள மணி நிமிடங்களை எடுத்து எழுதிக்கொண்டு கூட்டினால் அடுத்த லக்னத்தின் முடிவு நேரம் கிடைக்கும். இது போல் தேவையான லக்னம் கிடைக்கும் வரை எடுத்து எழுதிக்கொண்டு கூட்டிக்கொள்ளவேண்டும்.
4. தோராயமாக லக்னத்தை நிர்ணயித்தபின், லக்னத் துருவம் உள்ள லக்னங்களுக்கு துருவ எண் கூட்டி லக்ன எண், திதி எண், கிழமை எண், நக்ஷத்திர எண் இவற்றைக் கூட்டி 9 ஆல் வகுத்து மீதி 0, 3, 5, 7, 9 ஆகிவற்றில் ஒன்றாக உள்ளதா என்று பார்க்கவேண்டும். பஞ்சகம் இவற்றில் ஒன்றாக அமையாவிட்டால் வேறு லக்னம் வைக்க வாய்ப்பு இருக்கிறதா என பார்க்கவேண்டும். பகல் 12 மணிக்குப் பிறகு க்ருஹப்ரவேசம் தவிர மற்ற சுப காரியங்கள் செய்யக்கூடாது. வேறு லக்னத்திற்கு வாய்ப்பின்றி, வேறு நாளிலும் செய்ய வழியில்லாத போது பஞ்சகப் ப்ரீதி பண்ணி சுபம் பண்ணலாம்.
இதுபோலவே கணக்கீடு செய்து நம் பஞ்சாங்கத்தில் அனைத்து முஹூர்த்த நாட்களும் கொடுக்கப்பட்டுள்ளன. 12.04.2007ம் தேதிக்கு ஒரு உதாரண லக்னக் கணக்கீட்டை கீழே பார்ப்போம். விவாஹத்திற்கு லக்னம் அமைப்பதாகக் கொள்வோம். 12ம் தேதி, சித்த யோகம், வியாழக் கிழமை, தசமி திதி, திருஓண நக்ஷத்திரம் எனவே யோகம், கிழமை, திதி, நக்ஷத்திரம் நன்றாக உள்ளன. இனி காலை 6.00 - 07.30 எம கண்டம் தவிர்த்து லக்னம் வைக்கவேண்டும்.
மேலும் உங்களுக்கு இதுபற்றிய சந்தேகம் இருந்தால் எந்தவித தயக்கமோ, கூச்சமோ இன்றி,
தொந்தரவு செய்கிறோம் என்று எண்ணாமல், பலர் பயனடைய நாமும் சிறிது உதவிசெய்வோம் என்ற
நோக்கத்தில் எழுதி அனுப்புங்கள். உங்களைப்போன்றே சந்தேகம் உள்ளவர்கள் நிறைய இருக்கக்
கூடும். அவற்றையும் விளக்கி இதே பக்கத்தில் வெளியிட்டு அனைவரும் பயனடையச் செய்வதே நமது
நோக்கம். அதுபோல் இது விஷயத்தில் அடியேனைக் காட்டிலும் பல மடங்கு விபரம் தெரிந்தவர்கள்,
மேலும் சுலபமாகவும் தெளிவாகவும் விளக்கக் கூடியவர்கள் இதை கண்ணுற நேர்ந்து, அவர்களுக்கு
நேரமும், உதவிசெய்ய மனமும் இருந்தால் இதைவிட மேம்பட்ட ஒரு கட்டுரையை கைமாறு கருதாமல்
எழுதி அநுப்புவார்களேயாகில் சிரம் தாழ்ந்து நமஸ்கரித்து ஏற்றுக்கொண்டு வெளியிடச்
சித்தமாக இருக்கிறோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம் (கொள்கிறேன்).