உண்மையான பக்தி

உண்மையான பக்தி
   
    கோயில் ஒன்றுக்கு துறவி ஒருவர் சென்றார். அந்த சமயம் கோயிலுக்கு வெளியே பலர் கூடி கடவுளைப்பற்றியும், எது நிஜமான பக்தி என்றும் சர்ச்சை செய்துகொண்டிருந்தார்கள். பெரும் கூச்சல் எழுந்த அந்த இடத்தின் வழியே சென்றார் துறவி. நடக்கும் எல்லா விஷயங்களையும் கவனித்தார். அவர் ஏதாவது தீர்வு சொல்வார் என்று எதிர்பார்த்தார்கள் எல்லோரும். ஆனால் அவரோ எதுவும் பேசாமல் சென்றார். இறைவனை வழிபட்டு முடித்தார் துறவி. அதன் பின்னராவது கூறுவார் என நினைத்தார்கள். அப்போதும் அவர் மவுனமாகவே இருந்தார். கொஞ்சநேரத்திற்குப் பிறகு கோயிலில் அன்னதானத்துக்கான பந்தி தொடங்கப்பட்டது.
    விவாதத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் பந்தியில் வந்து அமரத் தொடங்கினார்கள். அப்போதும் கூச்சல் எழுந்துகொண்டே இருந்தது. உணவு வகைகள் பரிமாறப்பட்டன. மெதுவாக விவாதக் குரல்கள் குறைந்தன. முழுவதும் பரிமாறப்பட்டதும் எல்லோரும் உணவின் ருசியில் ஆழ்ந்து உண்ணத் தொடங்கியபோது அந்த இடம் அமைதியாக இருந்தது. அந்த சமயத்தில் துறவி சொன்னார். இப்போது உணவின் சுவையில் ஆழ்ந்து இருப்பதுபோல தெய்வத்தின் உணர்வில் ஆழ்ந்து அந்த இன்பத்தை முழுமையாக அனுபவிக்கத் தொடங்கி விட்டீர்களானால், விவாதங்கள் எல்லாம் ஓய்ந்து அமைதி ஏற்பட்டுவிடும். எனவே சர்ச்சைகளை விட்டுவிட்டு இறையனுபவத்தில் மூழ்கப் பழகுங்கள்! அதுவே உண்மையான பக்தி!

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.