கண்டே பத்நாமி சுபகே த்வம்ஜீவ சரதஸ்சதம்” ….
அனேகமாக பாமரர் கூட அறிந்து வைத்துள்ள மந்திரம் இது. திருமணத்தில் திருமாங்கல்ய தாரணத்தின் போது ஓதப்படுகிறது. இம்மந்திரத்தின் பொருள் அறிந்து கொண்டால் இது மிகுந்த முஹ_ர்த்த மாதம் ஆதலால் பொருள் புரிந்து மனமுவந்து வாழ்த்துரைக்க ஏதுவாக இருக்கும்!.
மந்திங்கள் வேதமந்திரம்ஃ ஸ்லோகம் என இரு வகைப்படும். வேத மந்திரங்கள் வேதத்திலிருந்து எடுத்துக் கொள்ளப்படுகிறது. மற்ற ஸ்லோகங்கள் மற்றும் அவற்றை எதற்காக பயன்படுத்துகிறோம் என அறிவிக்கும் ஸங்கல்பங்கள்ஃ சூத்திரம் அல்லது காரிகை எனும் செய்முறை அந்தந்த சூத்திரத்தை எழுதிய ருஷிகளால் எழுதப்பட்டது.
இந்த ‘மாங்கல்யம் தந்துநா” என்பது வேதமல்ல ஸ்லோகமே!
இதன் பொருள் மங்களமான இந்த கயிற்றை (சூத்திரத்தை) உன் கழுத்தில் கட்டுகிறேன்! இந்த மங்கள நாண் மங்கையாகிய உன்னை என் உயிருள்ளவரை காத்து நிற்க கடைமைப்பட்டவனாகிய மணாளனாகிய நான்; ஜீவித்திருக்கிறேன் என்பதை உணர்த்தும். இதனால் பலவிதமான சுபங்களும் பெற்று சௌபாக்யவதியாக நீ நூறாண்டு காலம் வாழ வேண்டும். என்பது.
இந்து சட்டம் கூட அம்மி மிதித்து அருந்ததி பார்த்த பிறகே ஒரு திருமணம் முழுமையாக நிறைவுற்றதாக கருதுகிறது.!
தற்காலத்தில் இந்த திருமாங்கல்ய தாரணத்திற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. வேதம் வகுத்துக் கொடுத்த திருமண பந்தம் இதுவல்ல.!
திருமங்கல்யதாரணமே தேவையற்றது என்பதோ, மாங்கல்யதாரண வைபவத்தை மதிப்பற்றதாக்கவேண்டும் என்பதோ நமது நோக்கமல்ல,
அதைக்காட்டிலும் ஆயிரம் மடங்கு உயர்வானதான “பாணிக்ரஹணத்திற்கு” முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்பதே இந்தக்க கட்டுரையின் நோக்கம்.
நாச்சியார் திருமொழியில் ‘வாரணமாயிரம்” என்ற பத்து பாசுரங்களில் திருமாலை மணம்கொள்ளும் நிகழ்சிகளாக தான் கனாக்கண்டதாக ஆண்டாள் உரைக்கும்போது
‘மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்னூத
முத்துடைத்தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தென்னை
கைத்தலம் பற்றக்”; கனாக் கண்டேன் தோழி நான்! – என்கிறாள்.
கைத்தலம் பற்றக் கனாக்கண்டாதாக உள்ளதேயன்றி மங்கல நாண் அணிவிக்க கனாக்கண்டேன் என இல்லை. எனவே மங்கல நான் அணிவித்தல் என்பது நாச்சியார் காலத்திற்கும் வெகுகாலம் பின்னர் தோன்றியிருக்கவேண்டும்.
‘பாணிக்ரஹணம்” என்ற வதுவின் கையை வரன் பற்றும் வைபவத்திற்கே வேத மந்திரம் உள்ளது. இன்னமும் திருமண அழைப்பிதழ்களில் மட்டும் பெண்வீட்டார் ‘கன்னிகாதானம் செய்து கொடுப்பதாய் …” என்றும் பிள்ளை வீட்டார் ‘பாணிக்ரஹணம் செய்துகொள்வதாய் … ” என்றும் (அதன் பொருள் புரியாமலே) போட்டு வருகின்றனர்.
திருமாங்கல்ய தாரணத்திற்கு பிறகே பாணிக்ரஹணம் பண்ணவேண்டும். வேதம் சொல்லியபடி இந்த பாணிக்ரஹணத்திற்கு திருமாங்கல்ய தாரணத்தைக் காட்டிலும் முக்கியத்துவம் அளித்து இதனை முஹூர்த்த காலத்திற்குள் பண்ணவேண்டும். ஆனால் தற்போது நடை முறையில் இந்த பாணிக்ரஹணங்கள் யாவும் முஹூர்த்தம் தப்பி ராகு காலங்களிலும் எம கண்டங்களிலுமே நடந்துகொண்டிருக்கின்றன. காரணம்ஃ திருமாங்கல்ய தாரணம் ஆன உடனேயே உறவினர்களும் நண்பர்களும் கைகுலுக்கி வாழ்த்துச்சொல்ல ஆரம்பித்துவிடுகிறார்கள்! அத்தனை கூட்டமும் வாழ்த்துச் சொல்லி முடியும்வரை முஹூர்த்தம் காத்திருக்குமா என்ன?!
இந்த தம்பதிகள் தம் ஸம்ப்ரதாயப்படி புனிதமான அக்னியின் முன்னிலையில் திருமணபந்தம் செய்துகொண்டதை மதித்து மனமுவந்து பாராட்ட வந்தவர்கள் அவர்கள் புனிதமானதாய்க் கருதும் ஹோம விதானமான மணமேடையில் காலணிகளுடன் வந்து வாழ்த்துச் சொல்கிறார்கள். மனமார வாழ்த்த வந்தவர்கள் அந்தத் திருமணத்தின் புனிதத்தன்மை கெடாமலும் பார்த்துக்கொள்ள வேண்டுமல்லவா?!
இதைவிடப் பெரிய விஷயம் என்னவென்றால் திருமண நாளைக்கு முதல் நாளே ‘ரிஸப்ஷன்” ஏற்பாடு செய்து எந்தக் கால நேரத்தையும் அனுசரிக்காது பாணிக்ரஹணத்தைவிட பல மடங்கு மிஞ்சும் காரியங்களுக்கு நாகாPகம் என்ற பெயரில் பச்சைக்கொடி காட்டப்படுகிறதுஃ “ஜானவாஸம்”; என்ற சொல் வழக்கிலிருந்து மறைந்து அதற்கு பதிலாக ரிஸப்ஷன் என்ற சொல் நிரந்தரமாக இடம்பெறப்போகும் காலம் வெகு தொலைவில் இல்லை.
எல்லா கர்மாவிலும் முக்கியமான விஷயம் ஸங்கல்பம். இந்த ஸங்கல்பமானது கடவுளிடம் இதற்காக இதைச்செய்கிறேன் என்று செய்து கொடுக்கும் ஸத்ய ப்ரமாணமாகும். அதனால்தான் ஒவ்வொரு ஸங்கல்பத்திற்கு முன்னும் ப்ராணாயாமம் செய்து ஹ்ருதயத்தை நிர்மலமாக்கி மனதை ஒரு முகப்படுத்தி ஆத்மாவை அலங்கரித்துக்கொண்டிருக்கும் எம்பெருமானை ஓங்காரத்தினால் த்யானித்து அவன் கவனம் பெற்றபின் ஸங்கல்பம் செய்துகொள்ளப்படுகிறது. ஸங்கல்பம் செய்துகொண்ட உடனேயே கர்மாவிற்கான பலன் கிட்டிவிடும். ஆனால் கடவுளுக்குச் செய்து கொடுத்த ஸத்யப்ராமாணத்தின்படி நடந்து கொள்ளவேண்டியது ஸங்கல்பம் செய்துகொண்டவனின் பொறுப்பு.
மற்றெல்லா கர்மாக்களைக் காட்டிலும் திருமணத்திற்கான ஸங்கல்பம் மிக மிக சுருக்கமானது. ‘தர்மப்ரஜா ஸம்பத்யர்த்தம் உத்வாஹ கர்ம கரிஷ்யே” என ‘தர்மத்தை அனுஷ்டிக்கும் படியான பிள்ளைகளை பெற திருமண பந்தம் செய்துகொள்கிறேன்” என்று ஸங்கல்பம்.
இனம் மதம் மொழி வேறுபாடின்றி அனைவராலும் கடைப்பிடிக்கப்படுவது இந்த திருமண வைபவமாகும். அதுபோல் இந்து மதம் உட்பட பெரும்பாலான மதங்கள் ஓர் ஆண் ஒரு பெண்ணின் கையைப் பற்றுவதையே திருமணமாக வெகுகாலம் கடைப்பிடித்து வரப்பட்டுள்ளது.
‘மாங்கல்யம் தந்துநா” என்ற மந்திரம் வரும் இடத்தில் சரியாக ‘ஆசாஸாநா” என்ற வேத மந்திரம் சூத்திரக்காரரால் சொல்லப்பட்டுள்ளது.
அந்த மந்திரத்தில் தனக்கு நல்ல மனத்தையும்ஃ தெய்வீகஅழகையும்ஃ நிறைந்த ஐஸ்வர்யத்தையும்ஃ நல்ல குழந்தைகளையும் பெற விரும்பி என்னை நாடி வந்து அக்னியின் அருகில் நிற்கும் இந்த கன்னிகையை இந்த திருமணமாகிய சுப காரியத்திற்காக இந்த கயிற்றினால் (அந்நாளைய கயிறு தர்பம்) கட்டுகிறேன் எனக்கூறி இப்போதும் திருமங்கல்ய தாரணம் முடிந்த உடன் தர்பத்தினால் வரன் வதுஸவை கட்டும் வழக்கம் உள்ளது.
இந்த தர்பக் கயிறானது உத்வாஹம் என்னும் திருமண காரியம் ஆனதும் அவிழ்த்துப் போடவும் மந்திரம்(ப்ரத்வாமுஞ்சாமி …); உள்ளபடியால்ஃ அவிழ்த்துப்போடப்படும் இந்த தர்பக் கயிற்றுக்குப் பதிலாக அவிழாத ஆயுட்கால அடையாளமாக மங்களசூத்திரம் என்ற ஒன்றை அந்த இடத்தில் அணிவிக்கச்செய்வது பொருத்தமாக இருக்கும் என பின்னாளில் பெரியவர்கள் எண்ணியிருக்கக்கூடும். எனவே அந்த தருணத்திற்கு பொருத்தமான (மாங்கல்யம் தந்துநா.. என்ற) ஒரு ஸ்லோகத்தை படைத்துச் சேர்த்திருக்கிறார்கள்.
‘க்ருப்ணாமிதே…” என்ற பாணிக்ரஹண மந்திரத்தினால் வதுஸவின் கையைப்பற்றி பகன்ஃ அர்யமாஃ ஸவிதா போன்ற தேவர்களால் என்னுடைய முதுமைவரையில் நான் க்ரஹஸ்தாஸ்ரம தர்மத்தை கடைப்பிடித்து ஒழுகுவதற்காக எனக்களிக்கப்பட்ட கன்னிகையேஃ இன்று இந்த சுபமான வேளையில் இத்தனை தேவர்கள்ஃ தேவதைகள்ஃ அக்னிதேவன் மற்றும் இந்த சபை நிறைந்த நம் நலனை மனதாரவிரும்பும் பெரியோர்கள் நல்லோர்கள் முன்னிலையில் உன் கையைப்பற்றுகிறேன் இக்கணம் முதல் நாம் இருவரும் நான் நீ எனும் வேற்றுமை மறந்துஃ ‘நானென்றால் அது நீயும் நானும்ஃ நீயென்றால் அது நீயும் நானும” என்ற தத்துவத்தில் வாழ்வோமென ப்ரதிக்ஞை” செய்துகொள்வோம் என்கிறான்.
(இப்போதும் ஒருவர் கைமீது கை வைத்தே சத்தியம் செய்து கொடுக்கப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது.)
இந்த ப்ரதிக்ஞைக்கு ஸரஸ்வதி தேவியையே சாக்ஷpயாக (வேதப்படி) அழைக்கிறான.;
யார் தன்னுடன் ஏழு அடிகள் எடுத்து வைத்து உடன் வருகிறார்களோ அவனை உற்ற நண்பனாக கருதவேண்டும் என்று சாஸ்த்திரம். அதன்படி ‘ஸப்தபதி” எனும் ஏழு மந்திரத்திரங்களால் தன் புது உறவான மனைவியின் ஒவ்வொரு அiடியையும் தொடர்ந்து காக்கும் கடவுளான மஹாவிஷ்ணுவை வந்து காக்கும்படி வேண்டிக் கொள்கிறான்.
முதல் அடியில் உணவு குறைவின்றிக் கிடைக்கவும்ஃ இரண்டாவது அடியில் நல்ல ஆரோக்யமான உடலும் உள்ளமும் அமையவும்ஃ மூன்றாவது அடியில் நல்ல காரியங்களுக்காக வ்ரதங்களை மேற்கொள்ளவும்ஃ நான்காவது அடியுடன் தேஹ சௌக்ய சுகங்களைத் தருவதற்காகவும்ஃ ஐந்தாவது அடியுடன் ப்ராணிகளின் உதவி கிட்டவும்ஃ ஆறாவது அடியுடன் வசந்த காலம் போன்ற ஆறு பருவ காலங்களுமே நன்மையை மட்டுமே செய்யத்தக்கதாயிருப்பதற்காகவும்ஃ ஏழாவது அடியில் எதற்காக இந்த வாழ்க்கையை மேற்கொண்டோமோ அதன் பயனை குறைவின்றி அடையவும் ஸ்ரீமஹாவிஷ்ணுவானவர் எனைத்தொடரும் உன்னோடு வரவேண்டும் என ப்ரார்த்தித்துக் கொண்டு வதுவின் வலது பாதத்தை இடது கையினால் தாங்கி மிக மென்மையாக அவளை வழிநடத்தி அழைத்துச் செல்கிறான் வரன்.
‘ஸகாஸப்தபதாபவ…” என்ற மந்திரத்தினால் இந்த ஏழு அடிகளை என்னுடன் கடந்த நீ எனக்கு உற்ற தோழியாகிவிட்டாய் நாம் பரஸ்பரம் ஆத்மார்த்த நண்பர்களாகிவிட்டோம். முன்பே சொன்னதுபோல் நான் உன்னை எந்த நிலையிலும் கைவிடமாட்டேன் அதுபோல் நீயும் என்மீது அன்போடு ஆதரவாக என்நாளும் தோழியாக இருத்தல் வேண்டும்.
இங்கு கணவன் மனைவி ஒருவருக்கொருவர் எப்படி இருக்கவேண்டும் என்பதை வேதம் சொல்கிறது.
த்யௌ:ரஹம் – நான் ஆகாசமாயிருக்கிறேன் : ப்ருத்வி த்வம் – நீ பூமியாய் இரு
ரேதோஹம் – நான் உயிராக இருக்கிறேன் : ரேதோபி: தவ்ம் – நீ உயிரைத் தாங்கும் உடலாயிரு
மநோஹமஸ்மி – நான் மனதாய் இருக்கிறேன் : வாக் த்வம் – நீ வாக்காக (சொல்லாக) இருக்கிறாய்
(மனம் நினைத்ததை மாத்திரமே வாய் சொல்லமுடியும்)
ஸாமாஹமஸ்மி – நான் ஸாம வேதமாவேன் : ருக் துவம் – நீ ருக் வேதமாவாய்
(ருக்குகளைக் அடிப்டையாகக் கொண்டது ஸாமம்) என்று வேதம் பகர்கிறது.
இதைக் கொண்டே பின்வரும் கவிதையும் தோன்றியிருக்கக்கூடும்.
‘கண்ணாணால் நான் இமையாவேன்
காற்றானால் நான் கொடியாவேன்
மண்ணெண்றால் நான் மரமாவேன் நீ
மழையென்றால் நான் பயிராவேன் ” என்று.
பின்னர் … தான் எல்லா வகையிலும் விரும்பி போற்றத்தக்க குணநலன்களை உடைய இந்த கன்னிகையை தான் அடைய அருள்புரிந்த தேவர்களுக்கும் தேவதைகளுக்கும் நன்றி அறிவித்து சில ஹோமங்களைச் செய்கிறாhன். பின்னர் …
அம்மியாகிய கருங்கல்லில் அவள் பாதங்களை வைத்து ஏ கன்னிகையே நான் இத்தனை ஸத்தியம் உனக்குச் செய்து கொடுத்திருக்கிறேன்ஃ அதுபோல் உன்னிடமிருந்து ஒரேயொரு உறுதி மொழியைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்.
அதாவது… ‘நல்ல கனிகளை அணில் கடிக்கும்”; அதுபோல் நல்ல மனிதர்களை தீவினைப் பயனால் தீய மதிபெற்ற மாந்தர் துன்புறுத்தி நல்லவர்களையும் பாபக்குழிக்கு இழுத்துச்செல்ல யத்தனிப்பர். அதுபோன்ற மனதையும் அறிவையும் மயக்கி தன் வழிக்கு இழுக்கும் சந்தர்ப்பங்களில் நீ இந்த பாராங்கல்லைப்போல் உறுதியான மனத்துடன் அதை எதிர்த்து வெற்றி கொள்ளவேண்டும். என்று ‘ஆதிஷ்டேமம் …” என்ற வேத மந்திரம் சொல்கிறது.
நான் ஸப்த ருஷிகளுக்குப்பின் எட்டாமவனாக இருக்கிறேன், நீயும் ஸப்த ருஷிகளின் மனைவிகளில் தன் பதிவ்ரதாத் தன்மையினால் முக்கிய ஸ்தானத்தை அடைந்த அருந்ததியைப்போல் நல்ல பத்தினித்தன்மையுடன் எனக்கு விளங்குவாயாக என்று அருந்ததியை பார்க்கச் செய்கிறான். இவ்விடத்தில்ஃ ஒருவரைப் பார்த்து அவரைப் போல் நடந்துகொள் எனச் சொல்லப்படும் பொருளில் ‘பார்” என்ற வார்த்தை உபயோகிக்கப்பட்டுள்ளது. மேலும் அருந்ததி நக்ஷத்திரம் புலப்படும் விடிவதற்கு முன் செய்யப்படவேண்டிய க்ரியைகளின்போது அருந்ததி பார்க்கும்படி விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை மதிக்காமல் பகலிNலுயே அனைத்துக் கர்மாக்களையும் முடித்துவிடுகின்றனர். எனவே, பகலில் திருமணம் வைத்துக் கொண்டு ‘அருந்ததி காட்டுகிறான் …” என்று ஏளம் செய்பவர்கள் இதை உணரவேண்டும்.
இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த கருத்தாழம் மிக்க இந்த மந்திரங்கள் சொல்லப்படாமலே ஃ சொன்னாலும் நிர்ணயிக்கப்பட்ட நல்ல பொழுதில் சொல்ல வாய்ப்பளிக்கப் படாமலே இன்றைய திருமணங்கள் நடந்து முடிவடைகின்றன.
நம்முடைய வேதங்கள் தந்த ஸம்ப்ரதாயங்களும் சடங்குகளும் பொருள் பொதிந்தவை மற்றெங்கும் ஆதாரத்துடன் நெறிப்படுத்தப்பட்டு சூத்திரம் இயற்றப்பட்டு காணப்படாதவை. நம் தாயை பிறர் பழித்துப் பேசும்போது வரும் உணர்வு நம் ஸம்ப்ரதாயத்தைக் காப்பதிலும் வரவேண்டும்.
குறிப்பு:- தமிழில் வேறொரு பாண்டடிலிருந்து யுனிகோட் பாண்டிற்கு மாற்றம் செய்யப்பட்டபோது சில எழுத்துப்பிழைகள் தோன்றியுள்ளன.”பிழைகளுக்கு தமிழ்கூறும் நல்லுகத்தாரிடம் மன்னிப்புக் கோருகிறேன்” – தாஸன்.
Author of this article: Dr.N.V.Srinivasan M.A, M.Phil, PhD.
Article had been published in the ‘Anmikam’ monthly magazine in February – 1998, image given below:
You must be logged in to post a comment.