Home Astrology Classifieds Library Matrimonial Panchangam Services Vaideekam Contact Us
Login_________________________ Donate Us to maintain and improve! _________________________ English
Thanks for visiting our website. Suggestions and complaints are accepted. Use the link to switch between English View and Tamil View. Visit again and again.
ஸ்ரீ தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்த திருமாலை

திருமாலை தனியன்

திருவங்கப்பெருமாளரையர் அருளிச்செய்தது
மற்றொன்றும் வேண்டா மனமே. மதிளரங்கர்,
கற்றினம் மேய்த்த கழலிணைக்கீழ்,- உற்ற
திருமாலை பாடும்சீர்த் தொண்டரடிப்பொடியெம்
பெருமானை, எப்பொழுதும் பேசு.
ஸ்ரீ தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்த
திருமாலை
872:
காவலிற் புலனை வைத்துக் கலிதனைக் கடக்கப் பாய்ந்து,
நாவலிட் டுழிதரு கின்றோம் நமன்தமர் தலைகள் மீதே,
மூவுல குண்டு மிழ்ந்த முதல்வ.நின் நாமம் கற்ற,
ஆவலிப் புடைமை கண்டாய் அரங்கமா நகரு ளானே. (2) (1)
873:
பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா. அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே. என்னும்,
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும்,
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே. (2) (2)

874:
வேதநூல் பிராயம் நூறுமனிசர்தாம் புகுவ ரேலும்,
பாதியு முறங்கிப் போகும்நின்றதில் பதினை யாண்டு,
பேதைபா லகன தாகும்பிணிபசி மூப்புத் துன்பம்,
ஆதலால் பிறவி வேண்டேன்அரங்கமா நகரு ளானே. (3)

875:
மொய்த்தவல் வினையுள் நின்றுமூன்றெழுத் துடைய பேரால்,
கத்திர பந்து மன்றேபராங்கதி கண்டு கொண்டான்,
இத்தனை யடிய ரானார்க்கிரங்கும்நம் மரங்க னாய
பித்தனைப் பெற்று மந்தோ பிறவியுள் பிணங்கு மாறே. (4)

876:
பெண்டிரால் சுகங்க ளுய்ப்பான் பெரியதோ ரிடும்பை பூண்டு
உண்டிராக் கிடக்கும் போது உடலுக்கே கரைந்து நைந்து,
தண்டுழாய் மாலை மார்பன் தமர்களாய்ப் பாடி யாடி,
தொண்டுபூண் டமுத முண்ணாத் தொழும்பர்சோ றுகக்கு மாறே. (5)

877:
மறம்சுவர் மதிளெ டுத்து மறுமைக்கே வெறுமை பூண்டு,
புறம்சுவ ரோட்டை மாடம் புரளும்போ தறிய மாட்டீர்,
அறம்சுவ ராகி நின்ற அரங்கனார்க் காட்செய் யாதே,
புறம்சுவர் கோலஞ் செய்து புள்கவ்வக் கிடக்கின் றீரே. (6)

878:
புலையற மாகி நின்ற புத்தொடு சமண மெல்லாம்,
கலையறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்ப ரோதாம்,
தலையறுப் புண்டும் சாவேன் சத்தியங் காண்மின் ஐயா,
சிலையினா லிலங்கை செற்ற தேவனே தேவ னாவான். (7)

879:
வெறுப்பொடு சமணர் முண்டர் விதியில்சாக் கியர்கள், நின்பால்
பொறுப்பரி யனகள் பேசில் போவதே நோய தாகி
குறிப்பெனக் கடையு மாகில் கூடுமேல் தலையை ஆங்கே,
அறுப்பதே கருமங் கண்டாய் அரங்கமா நகரு ளானே. (8)

880:
மற்றுமோர் தெய்வ முண்டே மதியிலா மானி டங்காள்,
உற்றபோ தன்றி நீங்கள் ஒருவனென் றுணர மாட்டீர்,
அற்றமே லொன்ற றீயீர் அவனல்லால் தெய்வ மில்லை,
கற்றினம் மேய்த்த வெந்தை கழலிணை பணிமி னீரே. (9)

881:
நாட்டினான் தெய்வ மெங்கும் நல்லதோ ரருள்தன் னாலே,
காட்டினான் திருவ ரங்கம் உய்பவர்க் குய்யும் வண்ணம்,
கேட்டிரே நம்பி மீர்காள். கெருடவா கனனும் நிற்க,
சேட்டைதன் மடிய கத்துச் செல்வம்பார்த் திருக்கின் றீரே. (10)
882:
ஒருவில்லா லோங்கு முந்நீர் அனைத்துல கங்க ளுய்ய,
செருவிலே யரக்கர் கோனைச் செற்றநம் சேவ கனார்,
மருவிய பெரிய கோயில் மதிள்திரு வரங்க மென்னா,
கருவிலே திருவி லாதீர் காலத்தைக் கழிக்கின் றீரே. (11)

883:
நமனும்முற் கலனும் பேச நரகில்நின் றார்கள் கேட்க,
நரகமே சுவர்க்க மாகும் நாமங்க ளுடைய நம்பி,
அவனதூ ரரங்க மென்னாது அயர்த்துவீழ்ந் தளிய மாந்தர்,
கவலையுள் படுகின் றாரென் றதனுக்கே கவல்கின் றேனே. (12)

884:
எறியுநீர் வெறிகொள் வேலை மாநிலத் துயிர்க ளெல்லாம்,
வெறிகொள்பூந் துளவ மாலை விண்ணவர் கோனை யேத்த,
அறிவிலா மனித ரெல்லாம் அரங்கமென் றழைப்ப ராகில்,
பொறியில்வாழ் நரக மெல்லாம் புல்லெழுந் தொழியு மன்றே? (13)

885:
வண்டின முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை,
கொண்டல்மீ தணவும் சோலை குயிலினம் கூவும் சோலை,
அண்டர்கோ னமரும் சோலை அணிதிரு வரங்க மென்னா,
மிண்டர்பாய்ந் துண்ணும் சோற்றை விலக்கிநாய்க் கிடுமி னீரே. (2) (14)

886:
மெய்யர்க்கே மெய்ய னாகும் விதியிலா வென்னைப் போல,
பொய்யர்க்கே பொய்ய னாகும் புட்கொடி யுடைய கோமான்,
உய்யப்போ முணர்வி னார்கட் கொருவனென் றுணர்ந்த பின்னை,
ஐயப்பா டறுத்துத் தோன்றும் அழகனூ ரரங்க மன்றே? (15)

887:
சூதனாய்க் கள்வ னாகித் தூர்த்தரோ டிசைந்த காலம்,
மாதரார் கயற்க ணென்னும் வலையுள்பட் டழுந்து வேனை,
போதரே யென்று சொல்லிப் புந்தியில் புகுந்து, தன்பால்
ஆதரம் பெருக வைத்த அழகனூ ரரங்க மன்றே? (16)

888:
விரும்பிநின் றேத்த மாட்டேன் விதியிலேன் மதியொன் றில்லை,
இரும்புபோல் வலிய நெஞ்சம் இறையிறை யுருகும் வண்ணம்
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்ட,
கரும்பினைக் கண்டு கொண்டேன் கண்ணிணை களிக்கு மாறே. (17)

889:
இனிதிரைத் திவலை மோத எறியும்தண் பரவை மீதே,
தனிகிடந் தரசு செய்யும் தாமரைக் கண்ண னெம்மான்,
கனியிருந் தனைய செவ்வாய்க் கண்ணணைக் கண்ட கண்கள்,
பனியரும் புதிரு மாலோ எஞ்செய்கேன் பாவி யேனே. (18)

890:
குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி,
வடதிசை பின்பு காட்டித் தென்திசை யிலங்கை நோக்கி,
கடல்நிறக் கடவு ளெந்தை அரவணைத் துயிலு மாகண்டு,
உடலெனக் குருகு மாலோ எஞ்செய்கே னுலகத் தீரே. (2) (19)

891:
பாயுநீ ரரங்கந் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொண்ட,
மாயனார் திருநன் மார்பும் மரகத வுருவும் தோளும்,
தூய தாமரைக் கண்களும் துவரிதழ் பவள வாயும்,
ஆயசீர் முடியும் தேசும் அடியரோர்க் ககல லாமே? (20)
892:
பணிவினால் மனம தொன்றிப் பவளவா யரங்க னார்க்கு,
துணிவினால் வாழ மாட்டாத் தொல்லைநெஞ் சே.நீ சொல்லாய்,
அணியனார் செம்பொ னாய அருவரை யனைய கோயில்,
மணியனார் கிடந்த வாற்றை மனத்தினால் நினைக்க லாமே? (21)

893:
பேசிற்றே பேச லல்லால் பெருமையொன் றுணர லாகாது,
ஆசற்றார் தங்கட் கல்லால் அறியலா வானு மல்லன்,
மாசற்றார் மனத்து ளானை வணங்கிநா மிருப்ப தல்லால்,
பேசத்தா னாவ துண்டோ ? பேதைநெஞ் சே.நீ சொல்லாய். (22)

894:
கங்கயிற் புனித மாய காவிரி நடுவு பாட்டு,
பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழி லரங்கந் தன்னுள்,
எங்கள்மா லிறைவ னீசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்,
எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையே னேழை யேனே. (23)

895:
வெள்ளநீர் பரந்து பாயும் விரிபொழி லரங்கந் தன்னுள்,
கள்ளனார் கிடந்த வாறும் கமலநன் முகமும் கண்டு
உள்ளமே. வலியை போலும் ஒருவனென் றுணர மாட்டாய்,
கள்ளமே காதல் செய்துன் கள்ளத்தே கழிக்கின் றாயே. (24)

896:
குளித்துமூன் றனலை யோம்பும் குறிகொளந் தணமை தன்னை,
ஒளித்திட்டே னென்க ணில்லை நின்கணும் பத்த னல்லேன்,
களிப்பதென் கொண்டு நம்பீ. கடல்வண்ணா. கதறு கின்றேன்,
அளித்தெனக் கருள்செய் கண்டாய் அரங்கமா நகரு ளானே. (25)

897:
போதெல்லாம் போது கொண்டுன் பொன்னடி புனைய மாட்டேன்,
தீதிலா மொழிகள் கொண்டுன் திருக்குணம் செப்ப மாட்டேன்,
காதலால் நெஞ்ச மன்பு கலந்திலே னதுதன் னாலே,
ஏதிலே னரங்கர்க்கு எல்லே. எஞ்செய்வான் தோன்றி னேனே. (26)

898:
குரங்குகள் மலையை தூக்கக் குளித்துத்தாம் புரண்டிட்டோடி,
தரங்கநீ ரடைக்க லுற்ற சலமிலா அணிலம் போலேன்,
மரங்கள்போல் வலிய நெஞ்சம் வஞ்சனேன் நெஞ்சு தன்னால்,
அரங்கனார்க் காட்செய் யாதே அளியத்தே னயர்க்கின் றேனே. (27)

899:
உம்பரா லறிய லாகா ஒளியுளார் ஆனைக் காகி,
செம்புலா லுண்டு வாழும் முதலைமேல் சீறி வந்தார்,
நம்பர மாய துண்டே? நாய்களோம் சிறுமை யோரா,
எம்பிராற் காட்செய் யாதே எஞ்செய்வான் தோன்றி னேனே. (28)

900:
ஊரிலேன் காணி யில்லை உறவுமற் றொருவ ரில்லை,
பாரில்நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி,
காரொளி வண்ணனே என் கண்ணனே கதறுகின்றேன்,
ஆருளர்க் களைக்கணம்ம அரங்கமா நகரு ளானே. (29)

901:
மனத்திலோர் தூய்மை யில்லை வாயிலோ ரிஞ்சொ லில்லை,
சினத்தினால் செற்றம் நோக்கித் தீவிளி விளிவன் வாளா,
புனத்துழாய் மாலை யானே. பொன்னிசூழ் திருவ ரங்கா,
எனக்கினிக் கதியென் சொல்லாய் என்னையா ளுடைய கோவே. (30)
902:
தவத்துளார் தம்மி லல்லேன் தனம்படத் தாரி லல்லேன்,
உவர்த்தநீர் போல வென்றன் உற்றவர்க் கொன்று மல்லேன்,
துவர்த்தசெவ் வாயி னார்க்கே துவக்கறத் துரிச னானேன்,
அவத்தமே பிறவி தந்தாய் அரங்கமா நகரு ளானே. (31)

903:
ஆர்த்துவண் டலம்பும் சோலை அணிதிரு வரங்கந் தன்னுள்,
கார்த்திர ளனைய மேனிக் கண்ணனே. உன்னைக் காணும்,
மார்க்கமொ றறிய மாட்டா மனிசரில் துரிச னாய,
மூர்க்கனேன் வந்து நின்றேன், மூர்க்கனேன் மூர்க்க னேனே. (32)

904:
மெய்யெல்லாம் போக விட்டு விரிகுழ லாரில் பட்டு,
பொய்யெலாம் பொதிந்து கொண்ட போட்கனேன் வந்து நின்றேன்,
ஐயனே. அரங்க னே.உன் அருளென்னு மாசை தன்னால்,
பொய்யனேன் வந்து நின்றேன் பொய்யனேன் பொய்ய னேனே. (33)

905:
உள்ளத்தே யுறையும் மாலை உள்ளுவா னுணர்வொன் றில்லா,
கள்ளத்தேன் நானும் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டேன்,
உள்ளுவா ருள்ளிற் றெல்லாம் உடனிருந் தறிதி யென்று,
வெள்கிப்போ யென்னுள் ளேநான் விலவறச் சிரித்திட் டேனே. (34)

906:
தாவியன் றுலக மெல்லாம் தலைவிளாக் கொண்ட எந்தாய்,
சேவியே னுன்னை யல்லால் சிக்கெனச் செங்கண் மாலே,
ஆவியே.அமுதே என்றன் ஆருயி ரனைய எந்தாய்,
பாவியே னுன்னை யல்லால் பாவியேன் பாவி யேனே. (35)

907:
மழைக்கன்று வரைமு னேந்தும் மைந்தனே.மதுர வாறே,
உழைக்கன்றே போல நோக்கம் உடையவர் வலையுள் பட்டு,
உழைக்கின்றேற் கென்னை நோக்கா தொழிவதே,உன்னை யன்றே
அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி. அரங்கமா நகரு ளானே. (36)

908:
தெளிவிலாக் கலங்கல் நீர்சூழ் திருவரங்கங் கத்துள் ளோங்கும்,
ஒளியுளார் தாமே யன்றே தந்தையும் தாயு மாவார்,
எளியதோ ரருளு மன்றே எந்திறத் தெம்பி ரானார்,
அளியன்நம் பையல் என்னார் அம்மவோ கொடிய வாறே. (37)

909:
மேம்பொருள் போக விட்டு மெய்ம்மையை மிகவு ணர்ந்து,
ஆம்பரி சறிந்து கொண்டு ஐம்புல னகத்த டக்கி,
காம்புறத் தலைசி ரைத்துன் கடைத்தலை யிருந்து,வாழும்
சோம்பரை உகத்தி போலும் சூழ்புனல் அரங்கத் தானே. (2) (38)

910:
அடிமையில் குடிமை யில்லா அயல்சதுப் பேதி மாரில்,
குடிமையில் கடைமை பட்ட குக்கரில் பிறப்ப ரேலும்,
முடியினில் துளபம் வைத்தாய். மொய்கழற் கன்பு செய்யும்,
அடியரை யுகத்தி போலும் அரங்கமா நகரு ளானே. (39)

911:
திருமறு மார்வ.நின்னைச் சிந்தையுள் திகழ வைத்து,
மருவிய மனத்த ராகில் மாநிலத் துயிர்க ளெல்லாம்,
வெருவரக் கொன்று சுட்டிட் டீட்டிய வினைய ரேலும்,
அருவினைப் பயன துய்யார் அரங்கமா நகரு ளானே. (40)
912:
வானுளா ரறிய லாகா வானவா. என்ப ராகில்,
தேனுலாந் துளப மாலைச் சென்னியாய். என்ப ராகில்,
ஊனமா யினகள் செய்யும் ஊனகா ரகர்க ளேலும்,
போனகம் செய்த சேடம் தருவரேல் புனித மன்றே? (41)

913:
பழுதிலா வொழுக லாற்றுப் பலசதுப் பேதி மார்கள்,
இழிகுலத் தவர்க ளேலும் எம்மடி யார்க ளாகில்,
தொழுமினீர் கொடுமின் கொள்மின் என்றுநின் னோடு மொக்க,
வழிபட வருளி னாய்போன்ம் மதிள்திரு வரங்கத் தானே. (42)

913:
அமரவோ ரங்க மாறும் வேதமோர் நான்கு மோதி,
தமர்களில் தலைவ ராய சாதியந் தணர்க ளேலும்,
நுமர்களைப் பழிப்ப ராகில் நொடிப்பதோ ரளவில், ஆங்கே
அவர்கள்தாம் புலையர் போலும் அரங்கமா நகரு ளானே. (43)

915:
பெண்ணுலாம் சடையி னானும் பிரமனு முன்னைக் காண்பான்,
எண்ணிலா வூழி யூழி தவஞ்செய்தார் வெள்கி நிற்ப,
விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கன் றருளை யீந்த
கண்ணறா, உன்னை யென்னோ களைகணாக் கருது மாறே. (2) (44)

916:
வளவெழும் தவள மாட மதுரைமா நகரந் தன்னுள்,
கவளமால் யானை கொன்ற கண்ணனை அரங்க மாலை,
துவளத்தொண் டாய தொல்சீர்த் தொண்டர டிப்பொ டிசொல்,
இளையபுன் கவிதை யேலும் எம்பிறார் கினிய வாறே. (2) (45)

தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்
Donate Us

Home        Register        Downloads        Search        Contact Us
Copyright (c) 2011 www.ahobilam.com                 Web site does not belong to any Mutt or Ashram!              Privacy Policy | Disclaimer
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருக!! நல் ஆலோசனைகள் தருக!!!